தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலை சேர்ந்த இளைஞன் ஒருவர், துபாய் எண்ணெய் கப்பலில் தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலை துபாயில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய , மாநில அரசுகளின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பத்தினர்....
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கிரேட் ஈஸ்டர்ன் கப்பல் கம்பெனிக்கு சொந்தமாக 20க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் குஜராத், மும்பை, கல்கத்தா உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.அந்த கப்பல்களில் ஒன்றான எம்.வி ஜாக் லலித் என்ற கப்பலில், தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலை சேர்ந்த கிப்சன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 24ந்தேதி குஜராத்தில் இருந்து துபாய்க்கு கச்சா எண்ணெய் ஏற்றச்சென்ற கப்பலில் பணிக்கு சேர்ந்தார் கிப்சன். கடந்த 15ந்தேதி அந்த கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியா புறப்பட்ட சிறிது நேரத்தில் கப்பலின் மேல் தளத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் துப்புரவுபணியை மேற்கொண்ட கிப்சன், தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகின்றது.
உயிருக்கு போராடிய கிப்சனை கப்பலில் உள்ள சக ஊழியர்கள் போராடி மீட்டுள்ளனர். துபாய் கடற்பரப்பில் கப்பலை நிலை நிறுத்தி விட்டு சிறிய ரக படகில் ஏற்றி கிப்சனை துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து காவல்துறைக்கும், துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிப்சன் பணிபுரிந்த கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் ஜாக் லலித் கப்பல் துபாய் கடற்பரப்பில் 4 நாட்கள் சிறைவைக்கப்பட்டுள்ளது. கிப்சன் பலியான தகவல், அவரை பணியில் சேர்த்துவிட்ட பெர்னார்டு கப்பல் மேலாண்மை நிறுவனத்துக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக கிப்சனின் பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது.
கதறித்துடித்த அவர்கள் தங்கள் மகனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கப்பல் மாலுமிகள் நலச்சங்கத்தின் உதவியுடன் மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் கிப்சனின் உடலை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு கொண்டுவர, சரக்கு மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய தூதரகத்திற்கும் மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
குடும்ப வறுமையை போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிப்சன் கப்பலில் வேலைக்கு சென்றுள்ளார் எதிர்பாராத விதமாக கிப்சன் பரிதாபமாக பலியானதால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் புன்னாக்காயல் மக்களும் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
.