சவுதி இளவரசிக்கு சிறைதண்டனை விதிக்ககோரிய வழக்கு செப். 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு:
பிரான்ஸில் தொழிலாளியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சவுதி இளவரசிக்கு சிறைதண்டனை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்கு இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் உள்ள சவுதி இளவரசிக்கு சொந்தமான குடியிருப்பில் வேலை பார்த்த தொழிலாளியை இளவரசி தாக்கியது தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இளரசியின் குடியிருப்பை புகைப்படம் எடுத்ததாக கூறி பாதுகாவலர் மூலம் தன்னை தாக்கியதுடன் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும், கடுமையான வார்த்தைகளால் அவமானப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளி அஷ்ரஃப் ஈத் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சவுதி இளவரசி ஆஜராகாததால் அவருக்கு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்ட போது,வாதிட்ட இளவரசி தரப்பு வழக்கறிஞர் இம்மானுவேல் மொய்னீ, புகைப்படத்தை பயன்படுத்தி அந்த தொழிலாளி பணம் சம்பாதிக்க முயல்வதாகவும்,சவுதி நாட்டின் சட்டப்படி இளவரசி குடியிருப்பை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது என்றும் கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அஷ்ரஃப் ஈத் தரப்பு வழக்கறிஞர், கொலை செய்ய பாதுகாவலரை இளவரசி பணித்ததாகவும், இது தொடர்பான ஆதாரங்களை சமர்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் விசாரணைக்கு தற்போதும் ஆஜராகாத இளவரசிக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததை அடுத்து இந்த சம்பவம் இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட இளவரசி சவுதியின் இளவரசரான முகமது பின் சல்மானின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது