அமீரகத்தில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த ஏஜெண்டு:மேலும் தமிழக பெண்கள் 2 பேர் மீட்பு:
அமீரகத்தில் பெண் ஏஜெண்டால் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண்கள் 2 பேர் மீட்கப்பட்டு, அவர்கள் சொந்த ஊர் செல்ல இந்திய தூதரகம் உதவி செய்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய தமிழ்நாட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி வீரம்மாள் (28).இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார். கணவர் ராதாகிருஷ்ணனுக்கு வேலை இல்லை. வறுமை வாட்டிய நேரத்தில் ஒரு பெண் ஏஜெண்டு வீரம்மாளை தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது அவர், உனக்கு துபாயில் சமையல் வேலை வாங்கி தருகிறேன். அங்கு சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய வீரம்மாள், பெண் ஏஜெண்டுக்கு பல்வேறு கட்டங்களில் பணம் கொடுத்துள்ளார்.பிறகு ஏஜெண்டுடன் சேர்ந்து வீரம்மாள் சுற்றுலா விசா மூலம் துபாய் வந்தடைந்தார்.துபாய்க்கு வந்த பிறகு வீரம்மாளை பல்வேறு வீடுகளுக்கு அழைத்து சென்று சமையல், இஸ்திரி, துப்புரவு என அனைத்து வேலைகளையும் செய்யுமாறு பெண் ஏஜெண்டு கூறியுள்ளார்.இதற்காக மாதம் 900 திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 17 ஆயிரம் ரூபாய்) சம்பளம் கொடுத்துள்ளார்.
மேலும் வீரம்மாளின் பாஸ்போர்ட்டையும் ஏஜெண்டு வாங்கி வைத்துக் கொண்டார். தொடர்ந்து அவரை அபுதாபி மற்றும் சார்ஜாவுக்கு அழைத்து சென்று அதிகாலை 3 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து வீட்டு வேலை செய்ய வைத்தார்.இதனால் வீரம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இது குறித்து அவர் பெண் ஏஜெண்டிடம் பலமுறை முறையிட்டபோதும் கண்டுகொள்ளவில்லை.
ஒருகட்டத்தில் பெண் ஏஜெண்டு, வீரம்மாளை அஜ்மானுக்கு அழைத்து சென்றார்.அங்குள்ள ஒரு வீட்டில் நிறைய பெண்களுடன், வீரம்மாளையும் சிறைக்கைதி போன்று அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அவருக்கு சரியாக சம்பளமும் கொடுக்கவில்லை. இந்தநிலையில் வீரம்மாள், இந்தியாவை சேர்ந்த ஒரு டாக்சி டிரைவர் உதவியுடன் அங்கிருந்து அபுதாபிக்கு தப்பி சென்றார்.அதனை தொடர்ந்து அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் மல்க கூறினார். அவருக்கு தூதரக அதிகாரி ஸ்மிதா பாண்ட் தலைமையிலான தூதரக குழுவினர் தேவையான உதவிகளை செய்தனர்.
இதை அறிந்த பெண் ஏஜெண்டு தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றார்.தூதரக அதிகாரிகள் அப்பெண் ஏஜெண்டு மீது நடவடிக்கை எடுக்கவும், அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களை மீட்கவும் அமீரக அரசு உதவியை நாடியுள்ளனர்.வீரம்மாளை போன்று ஏஜெண்டால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளான தமிழகத்தை சேர்ந்த லோகேஷ்வரி என்ற பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார். வீரம்மாள் மற்றும் லோகேஷ்வரி ஆகியோர் விரைவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோல் கடந்த வாரம் கோயம்புத்தூரை சேர்ந்த 4 தமிழக பெண்கள் துபாயில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.