சவுதியிலிருந்து ஏர்-இந்தியா விமானத்தில் 2 வழித்தடங்களில் புனித ஜம் ஜம் நீர் கொண்டு வர தடை:
சவுதியில் கடந்த வாரம் இந்தவருட ஹஜ் யாத்திரை துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலிருந்து 2 லட்சம் பேர் வரையில் இந்த வருடம் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ஏர்-இந்தியா ஜித்தா-கொச்சி (AI 964), ஜித்தா ஹைதராபாத்/மும்பை(AI 966) ஆகிய வான் தடங்களில் இயக்கப்பட்டு வந்த விமானங்களை ஹஜ் விமான பயணிகளுக்காக மாற்றப்பட்டு இத்தடங்களில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுவதால் செப்டம்பர் 15,2019 தேதி வரை இவ்விரு விமான தடங்களில் மட்டும் புனித ஜம் ஜம் நீரை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளதாகவும்.இத்தடை உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஜூலை 4 தேதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேவேளை புனித ஹஜ்ஜிற்காக இயக்கப்படும் சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் சவுதியிலிருந்து பிற வான் தடங்களுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு இத்தடை பொருந்தாது.
மக்காவில் செயல்படும் "நேஷனல் வாட்டர் கம்பெனி" (NWC) எனப்படும் புனித ஜம் ஜம் கிணற்று நீரை கையாளும் நிறுவனம் தற்போது 10 லிட்டர்களுக்கு பதிலாக 5 லிட்டர் கேன்களை மட்டுமே வழங்கி வருகின்றது. ஹஜ் உம்ரா செய்யும் முஸ்லீம்கள் தாங்களும் அருந்தி தாயகத்தில் உள்ள உறவுகளுக்கும் வழங்க இப்புனித நீரை கொண்டு வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.