குவைத் தனக்கு நடந்த வேதனை சொல்லும் மன்னார்குடி பெண்;நல்லா சம்பாதிக்கலாம்னு நினைக்கிறவங்கள கெஞ்சி கேட்கிறேன்......
குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு போலியான ஏஜென்டுகள் மூலமாக வீட்டு வேலைக்காக செல்லும் தமிழ்ப் பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் செய்திகளை அன்றாடம் பார்க்கிறோம். ஆனாலும் சில பெண்கள் தொடர்ந்து ஏமாந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் சுமதி. இவர் கணவரைப் பிரிந்து தன் தாயுடன் வாழ்ந்து வருகிறார். இரண்டு பெண் ஏஜென்டுகள் மூலமாக கடந்த மே மாதம் குவைத்துக்கு வீட்டு வேலைக்கு வந்தார்.குவைத்தி குடும்பத்தினர் சுமதிக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி அடித்து உதைத்து தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற சுமதி, மூன்றாவது மாடியிலிருந்து குதித்துள்ளார்.
இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்த நிலையில் குவைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இந்திய தூதரகம், திருவாரூர் கலெக்டர், தன்னார்வத் தொண்டு நிறுவனம், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் உதவியுடன் கடந்த ஜூலை 5-ம் தேதி இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டார். தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள சுமதி சிகிச்சைக்காக பெற்று வருகிறார்.
விகிடன் நிருபர் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு நடத்திய நேர்காணல் பின்வருமாறு:
என் சொந்த ஊர் மன்னார்குடி. கணவரைவிட்டுப் பிரிந்து அம்மாகூடதான் வாழ்ந்துகொண்டு இருக்கேன். இரண்டு பெண்கள் மூலம் கடந்த மே 13-ம் தேதி குவைத்துக்குப் போனேன். என்னை அனுப்பி வைத்த அந்த இரண்டு பெண்களுமே ஏஜென்டுகள்தான்.பாஸ்போர்ட் கைக்கு வந்தபோதே குவைத்துக்குப் போக எனக்கு பயமா இருக்கு. நிறைய பொண்ணுங்க அங்க கொடுமைப்படுத்தப்பட்றாங்கன்னு நான் எவ்வளவோ சொன்னேன். ஆனா, அவங்க ரெண்டு பேரும் எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. அந்த தைரியத்துல குவைத்துக்குப் போனேன். குவைத்தில் இருக்கும் ஏஜென்சி என்னை ஒரு வீட்டுக்கு அனுப்பி வெச்சாங்க. அந்தக் குடும்பத்துல மொத்தம் 9 பேர்.
வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து சரியா உணவுகூட கொடுக்கமாட்டாங்க. அந்த வீட்டுப் பெண் ஒருத்தர் என்னை அடிப்பாங்க. சாப்பாடு கொடுங்க, சாப்பிடாம எப்படி வேலை பார்க்க முடியும். மயக்கம் வருதுன்னு சொல்லுவேன். அதற்கு அவங்க ``இந்த இந்தியாகாரங்களே இப்படிதான் சாப்பாடு சாப்பாடுன்னு கேட்பாங்கன்னு ஆங்கிலத்துல திட்டுவாங்க. சகிச்சிக்கிட்டு வேலை பார்த்தேன். ஆனால், ஒரு கட்டத்துல என்னால முடியல. நான் அங்கப்போய் எட்டாவது நாள் இவ்வளவு கொடுமை நடந்துச்சு. என்னைக் கொண்டு வந்து விட்ட ஏஜென்ட்டை பார்க்கப் போகணும்னு கேட்டேன்.
அதற்கு அவங்க என் போனை பிடிங்கி வெச்சிட்டு, ஒரு தனி அறையில என்னை வெச்சு பூட்டிட்டாங்க. எட்டி உதைச்சாங்க. அதில் நான் மயங்கிட்டேன். காய்ச்சல் வேற வந்துடுச்சு. அப்புறம் கதவைத் தட்டினேன். கூச்சலிட்டேன். அவங்க வந்து கதவைத் திறந்தாங்க. காய்ச்சலா இருக்கு மாத்திரை குடுங்கன்னு கேட்டேன். அவங்க கொடுத்துட்டு அறையில் கதவை பூட்டாம போய்டாங்க. இதான் வாய்ப்பு தப்பிச்சிடலாம்னு முடிவு பண்ணேன். பேக் டோர் வழியா கீழே பார்த்தேன். தரை கொஞ்சம் பக்கத்துல இருந்த மாதிரி தெரிஞ்சது. அதனால் குதிச்சிட்டேன். விழுந்த பிறகு மூணு மணி நேரம் சுயநினைவு இல்லாம இருந்தேன்.
மயக்கம் தெளிஞ்சதும் ஹெல்ப் ஹெல்ப்ன்னு கத்தினேன். அங்கிருந்த ஒருவர் போலீஸுக்கு போன் போட்டுக் கொடுத்தார். நான் என் நிலைமைய சொன்னேன். அவங்க ஆம்புலன்ஸோட வந்தாங்க. எனக்கு இடுப்பு எலும்பு நொறுங்கிட்டதா மருத்துவமனையில் சொன்னாங்க. அங்கு 40 நாள் சிகிச்சை கொடுத்தாங்க. நான் இங்க இப்படி அடிபட்டு இருந்தப்போ, என்னை குவைத்துக்கு அனுப்பிய அந்த இரண்டு பெண்களும் என் அம்மாவை மிரட்டி ஒரு லட்சம் கேட்டிருக்காங்க. பணம் கொடுத்தாதான் பொண்ணை இந்தியா வரவைப்போம், இல்லாட்டி பிணமாதான் வருவான்னு மிரட்டியிருக்காங்க.
உடனே அம்மா பயந்து திருவாரூர் கலெக்டரிடம் மனு கொடுத்தாங்க. கலெக்டர் ஆபீஸ் மூலமா விஷயம் இந்திய தூதரகத்துக்குப் போச்சு. தூதரக அதிகாரிகள் என்னை மருத்துவமனைக்கே வந்து பார்த்தாங்க. அப்புறம் ஐந்து நாள்ல இந்தியா வரும் அளவுக்கு சீக்கிரமா நடவடிக்கை எடுத்தாங்க. சமூக ஆர்வலர் கீரணி வெங்கட மதி எனக்கு டிக்கெட் போட்டு கொடுத்து, இந்தியா வர வரைக்கும் எதுவும் ஆகாம பார்த்துக்கிட்டாங்க. சென்னையில் இருக்கும் சமூக ஆர்வலர் வளர்மதியும் உதவி பண்ணினாங்க. தற்போது கலெக்டர் சார் உதவியோடு கோவை அரசு மருத்துவமனையில் இருக்கேன். வெளிநாட்டுக்கு வீட்டு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிக்கலாம்னு நினைக்குற பொண்ணுங்கள நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன்.
தயவு செய்து அந்த எண்ணத்தை மாத்திக்கோங்க. ஏஜென்டுகள் ஏமாத்துவாங்க. மைண்ட் வாஷ் பண்ணுவாங்க. நம்பாதீங்க. எனக்கு எடுத்த விசாக் கூட முறையா எடுத்த விசா கிடையாதுன்னு எனக்கு இப்போதான் தெரிஞ்சது. அதுமட்டுமல்ல. இந்த மாதிரி குவைத்துக்கு வேலைக்குப் போன பெண்கள் நிறைய பேர் இந்த மாதிரி கொடுமைகளை அனுபவிச்சி நாடு திரும்பியிருக்காங்கன்னு இப்போதான் எனக்குத் தெரியுது. இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா போயிருக்கவேமாட்டேன். இதெல்லாம் எனக்கு ஒரு பாடம். இன்னும் 6 மாசத்துக்கு என்னால எந்திரிக்கவே முடியாது. என் இடுப்பு சுத்தி 19 ஸ்க்ரூ போட்டிருக்காங்க. என் லைஃப் போச்சி. நான் எம்.ஏ படிச்சிருக்கேன். ஆனாலும் குடும்பச் சூழல் காரணமா இப்படி போய் மாட்டிக்கிட்டேன் என்றார் மிகுந்த துயரத்துடன்.
நேர்காணல்: விகிடன்