பிரதமர் மோடியின் பஹ்ரைன் வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில் அரசர் ஹமாத்-பின்-இசை-பின்-சல்மான் அவர்களால் பல்வேறு குற்றங்களில் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் எத்தனை இந்தியர்கள், பஹ்ரைன் சிறைகளில் மொத்தம் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறித்து கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.
அதேநேரத்தில், வெளிநாடுகளில் பல்வேறு குற்றங்களில் 8 ஆயிரத்து 189 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகபட்சமாக சவுதியில் ஆயிரத்து 811 இந்தியர்களும், ஐக்கிய அரபு எமீரேட்சில் ஆயிரத்து 392 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பஹ்ரைன் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மனித நேய அடிப்படையில், பஹ்ரைன் அரசு, அந்நாட்டு சிறையில் உள்ள 250 இந்திய கைதிகளை விடுதலை செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.