சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்த தன்னுடைய கணவர் நான்கு மாதங்களுக்கு முன் இறந்த நிலையில், கணவரின் உடலை இதுவரை சொந்தவூர் கொண்டுவர முடியாமல் பெரம்பலூரை சேர்ந்த பெண் ஒருவர் தவித்து வருகிறார்.பெரம்பலூர் மாவட்டம், அலத்துர் வட்டம், பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக உறவினர் மூலமாக ஹனி நவாப் என்ற நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
கந்தசாமிக்கு சவுதியில் சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றில் வேலை கொடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகள் வேலை செய்த அவர், கடந்த ஆண்டு இறுதியில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். மீண்டும் சென்றபோது கந்தசாமிக்கு சூப்பர் மார்க்கெட்டில் வேலை கொடுக்காமல், தோட்டத்தில் வேலை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வேலை மிகவும் கடினமாக இருப்பதாகவும், உடல் நிலை சரியில்லை என்றும் கந்தசாமி தன்னுடைய மனைவியிடம் கூறியுள்ளார். மேலும், உடனே அனுப்பமாட்டார்கள் என்பதால் 6 மாதத்தில் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே வர முயற்சிப்பதாகவும் தன்னுடைய மனைவியிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களாக கந்தசாமிக்கு சம்பளம் தரப்படவில்லை என்று தெரிகிறது. பிறகு கொடுக்கப்பட்ட மூன்று மாத சம்பள பணத்தை கந்தசாமி தான் வேலை செய்த கடைக்கு அருகில் உள்ள கடையில் வேலை செய்த உசைன் என்பவரிடம் கொடுத்து வீட்டிற்கு அனுப்ப கூறியுள்ளார்.
இதை உசைன் கந்தசாமியின் மனைவி பவுனாம்பாளிடம் ஏப்ரல் 14 ஆம் தேதி காலை கூறியுள்ளார். மேலும், கந்தசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தான் மாலை கந்தசாமியை பார்க்க செல்வதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து மாலை 3 மணிக்கு பவுனாம்பாளுக்கு போன் செய்த உசைன் கந்தசாமி தூக்கு போட்டு இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். உடல் ரியாத் மருத்துவமனைக்கு சென்றுவிட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும், 10 நாட்களில் உடலை அனுப்புவார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் உடல் அனுப்பப்படவில்லை.
அதன்பிறகு பவுனாம்பாள் உசைனை தொடர்புகொண்ட போது போனை எடுக்கவில்லை. சில நாட்கள் கழித்து யாரோ ஒருவர் போனை எடுத்து, உசைன் பாய் வெளியே சென்றிருப்பதாக கூறியுள்ளார். உசேயின் சவுதி தொலைபேசி எண்: +966 508506846
இதனையடுத்து செய்வதறியாமல் திகைத்த பவுனாம்பாள் தங்கள் மகள்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தன்னுடைய கணவரின் உடலை கொண்டு வர உதவுமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அரசு முதன்மை செயலருக்கு அனுப்பியுள்ளார். பிறகு இந்திய தூதரகத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.இதனிடையே பவுனாம்பாளின் மகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கும், பிரதமருக்கும் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். ஆனால் நான்கு மாதங்களாகியும் இதுவரை உடல் கொண்டுவரப்படவில்லை.
இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்றும், தங்களால் தற்போது எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர். பவுனாம்பாளின் மூத்த மகள் காவலராக பணிபுரிகிறார். மற்றொரு மகள் படித்துக்கொண்டிருக்கிறார். நான்கு மாதங்களாக கந்தசாமியின் உடல் கொண்டவரப்படாததால் அவரின் குடும்பம் மீளா துயரில் ஆழ்ந்துள்ளது.
தங்களுக்கு யாரவது உதவி புரிந்து தன்னுடைய கணவரின் உடலை மீட்டு கொண்டுவர வேண்டும் என்று கண்ணீர் மல்க பவுனாம்பாள் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று 16/08/2019 வெள்ளிக்கிழமை வரையில் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்படவில்லை.