சவுதியில் சில தினங்களுக்கு முன்பு ன புதிதாக அறிவிக்கப்பட்ட விசாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:
சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களையே சார்ந்திருக்கிறது. இதனைப் படிப்படியாகக் குறைத்து வேறு வழிகளிலும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாகவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சவுதி அரேபிய அரசு. அந்நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்கு வெறும் 3 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இதனை வரும் 2030ம் ஆண்டுக்குள் சுமார் 10 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு 49 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்போவதாக தற்போது சவுதி அரசு அறிவித்துள்ளது. மேலும் மற்ற நாட்டவர்கள் தங்கள் அருகில் உள்ள சவுதி தூதரகத்தில் விண்ணப்பித்து சுற்றுலா விசா பெறலாம் .
சவுதி அரேபியாவில் ஐந்து இடங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தகுதிகள் நிறைந்த பல இடங்களும் இருக்கின்றன. எனவே, சுற்றுலாத்துறையை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம்.
சவுதி அரேபியாவின் அழகை ரசிக்க ஆவலோடு இருக்கும் உலக சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவிப்புகள் ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்தாலும், சுற்றுலா வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பல கடுமையான கட்டுப்பாடுகள் சுற்றுலா பயணிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சவுதிக்கு வரும் பெண்கள் உடலை முழுவதும் மறைக்கும் ஆடைகளைத்தான் அணிந்துதான் வரவேண்டும். ஆனால், சுற்றுலா பயணிகளுக்கு இந்த நடைமுறைகள் தளர்த்தப்பட்டாலும், சுற்றுலாவரும் பெண்கள் தங்கள் தோள்பட்டை, முழங்கால் போன்ற உடல் பாகங்கள் வெளியில் தெரியாத வகையில்தான் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் இருவருமே இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. பொது இடத்தில் முத்தம் கொடுக்க கூடாது. மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது. மற்றவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களை எடுப்பது, பொது இடங்களில் குப்பை கொட்டுவது, துப்புவது, பிரார்த்தனை நேரங்களின் போது இசைக்கருவிகளை வாசிப்பது என்று 19 விதிமுறைகள் இந்த பட்டியலில் இருக்கிறது.
இதனை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரையிலான அபராதத் தொகை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது சவுதி அரசு. சுற்றுலாத்துறையின் மூலம் பிறநாட்டு பயணிகளை ஈர்க்க சவுதி அரேபிய அரசு முயற்சித்தாலும் இத்தகைய கட்டுப்பாடுகள் உலக சுற்றுலாபயணிகளை எந்தளவிற்கு ஈர்க்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்