பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட சவுதியின் முக்கியத் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ரியாதில் நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் சவூதி பயணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என்ற போதும், அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலின் சவூதி பயணத்தைச் சார்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் பயணத்துக்கான முன்னேற்பாடுகளை அஜீத் தோவல் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததோடு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து விளக்கினார். ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி சவூதி அரேபியா சென்றார்.
அப்போது அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான அப்துல் அஜீஸ் சவுத் விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத்துறைகளில் சவூதி அரேபியா 100 பில்லியன் டாலர் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையிலும், சவூதி எண்ணெய் நிறுவனமான அராம்கோ இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையிலும் பிரதமர் மோடியின் சவூதி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.