திருச்சி - அபுதாபி இடையே வாரத்தில் 4 நாட்கள் மீண்டும் நேரடி விமான சேவை... மார்ச் 28-ஆம் தேதி முதல் இயக்கம்:
திருச்சி - அபுதாபி இடையே மீண்டும் நேரடி விமான சேவையை, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மார்ச் 28-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கவுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த சேவை 3 புதிய வழிதடங்களில் தொடங்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மார்ச் 28 ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து அபுதாபி மற்றும் தோகாவுக்கு வாரத்தில் 4 நாட்கள் நேரடி விமான சேவை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் மதுரையில் இருந்து டெல்லிக்கு தினமும் இயக்கப்படும் 4 விமானங்களில் ஒன்று திருச்சியில் இருந்து புறப்படும் என்றும் சியாம் சுந்தர் கூறியுள்ளார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 40 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னர் சென்னையிலிருந்து திருச்சி வழியாக அபுதாபிக்கு கடந்த 2009, ஏப்ரல் 30- ஆம் தேதி முதல் விமான சேவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்தது. 3 ஆண்டுகளுக்குப் பின்னா் 2012, ஏப்ரல் 27 -ஆம் தேதியுடன் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் புதிதாக நடைமுறையில் வரும் 4 சேவைகள் விபரம் பின்வருமாறு:
ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருச்சியிலிருந்து நள்ளிரவு 1.30 மணிக்குப் புறப்படும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (என்ஐஎக்ஸ் 615), அபுதாபி பன்னாட்டு விமானநிலையத்துக்கு அதிகாலை 04.35 மணிக்குச் சென்றடையும்.
எதிர்மார்க்கத்தில் அபுதாபியிலிருந்து அதிகாலை 5.35 மணிக்குப் புறப்படும் விமானம் (என்ஐஎக்ஸ் 616) திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு முற்பகல் 11.05 மணிக்கு வந்தடையும்.
பயணத்தின்போது 20 கிலோ எடையும் மற்றும் கை பையில் 7 கிலோவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயண உடைமை தேவைப்படுவோா், உரிய தொகை செலுத்தி எடுத்துச் செல்லும் வசதி இரு வழித்தடத்திலும் உள்ளது. வழக்கம் போல பயணத்தின்போது உணவு, தேநீா் மற்றும் குடிநீா் வழங்கப்படும்.