துபாயிலிருந்து வந்த நபர் உட்பட 2 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியானது; இதையடுத்து இதுவரையில் 5 பேர் கண்டறியப்பட்டனர்:
இந்தியாவில் ஏற்கெனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மூவர் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், இந்தியாவில் மேலும் இருவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
டெல்லியில் ஒருவருக்கும்,தெலங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (பிஐபி) உறுதி செய்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கியதாக கண்டுபிடிக்கப்பட்ட நபர் இத்தாலியில் இருந்து பயணம் செய்து வந்தவர். தெலங்கானாவில் நோய் உறுதி செய்யப்பட்டவர் துபாயில் இருந்து பயணம் செய்து வந்துள்ளார். இவரது பயண விவரங்கள் மேற்கொண்டு ஆராயப்படுகின்றன.
இரு நோயாளிகளும் உறுதியான நிலையில் உள்ளனர். இவர்களின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று பிஐபி சற்றுமுன் வெளியிட்ட செய்திக் குறிப்பு உறுதி செய்கிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்கிறது.
மேலும் பல நாடுகளுக்குப் பயணத் தடை:
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மேலும் பல நாடுகளுக்கு பயணத் தடை விரிவுபடுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
21 விமான நிலையங்கள், 12 பெரிய துறைமுகங்கள், 65 சிறிய துறைமுகங்கள் ஆகிய இடங்களில் பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 5,57,431 பயணிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.