குவைத்தில் ஹூக்கா- ஷீஷா கஃபேக்கள் விரைவில் திறக்கப்படாது என்று அதிகாரிகள் அறிவிப்பு:
அக்டோபர்-30,2020
குவைத்தில் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஹூக்கா கஃபேக்கள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் நிராகரித்ததுடன் தற்போதுள்ள சூழ்நிலையில் இப்படிபட்ட கஃபேக்கள் திறக்கப்படாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அந்த அறிக்கையில் கஃபேக்களில் சுகாதார வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் பெரிய சவால்கள் உள்ளதால் கஃபேக்களை மீண்டும் திறப்பதற்கான கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தனர். கோவிட் தடுப்பூசி மருந்து உலகளாவிய நிலையில் கிடைக்கும் போது மற்றும் குவைத்தில் தடுப்பூசி பிரச்சாரங்கள் தொடங்கப்படும் போதுதான் ஹூக்கா- ஷீஷா கஃபேக்கள் திறப்பு தொடர்பாக மீண்டும் ஆலோசனை செய்யபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் ஆரோக்கியத்தில் மட்டுமே தற்போது அரசின் கவனம் உள்ளது என்றும், பல்வேறு நாடுகளில் இரண்டாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் கொண்டுவர ஏற்பட்ட சூழ்நிலை கருத்தில் கொண்டு குவைத்திலும் இரண்டாம் கட்ட ஊரடங்கு நடைமுறை படுத்தாமல் இருக்க மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.