சென்னையில் பெய்த கனமழை, வெள்ளக்காடாக மாறியது சென்னை சர்வதேச விமான நிலையம்:
அக்டோபர்-29,2020
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விமானநிலையதில் இருந்து விமானங்கள் புறப்படுவதில் தாமதம் எற்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் பெங்களூர், சேலம், பூனே, கவுகாத்தி, அந்தமான், டெல்லி ஆகிய உள்நாட்டு விமானங்களும், லண்டன், தோஹா செல்லும் சர்வதேச சிறப்பு விமானங்களும் சுமார் அரை மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
மழை காரணமாகச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,விமானிகள், விமான ஊழியர்கள் தாமதமாக வருவதாலும், அதைப்போல் விமானங்களில் பயணிகள் உடைமைகளை ஏற்றுவதில் ஏற்படும் தாமதத்தாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
சென்னைக்கு வந்து தரையிறங்கும் விமானங்கள் இதுவரை காலதாமதம் ஏற்படவில்லை. ஆனால் மழை தொடர்ந்து பெய்தால் தாமதமாக வாய்ப்புகள் உள்ளன என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.