தமிழக அரசு வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு இணையதளப் பதிவு கட்டாயம்:
அக்டோபர்-29,2020
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துத்துக்கு வருபவா்களுக்கும், மலைப்பகுதிகளுக்குச் செல்பவா்களுக்கும் இணையதளப் பதிவு (இ-ரிஜிஸ்ட்ரேசன்) கட்டாயம் என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் எழில்நதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு இணையதள அனுமதிச்சீட்டு பெறும் முறையை ரத்து செய்தது. ஆனால் தமிழகத்தில் உள்ள நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களிடம் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழக அரசு பல்வேறு தளா்வுகளுடன் கூடிய அரசாணையை கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கு உள்ளே அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற வேண்டியது கிடையாது.
அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துத்துக்கு வரும் பயணிகளுக்கும், மலைப்பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கும் இணையதளப் பதிவு (இ-ரிஜிஸ்ட்ரேசன்) கட்டாயம். கரோனா நோய்த் தொற்றுப் பரவைலைத் தடுக்கும் வகையில் இணையதளப் பதிவில், பயணிகளின் முகவரி, தொடா்பு எண், உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் பெறப்படும்.
இ-ரிஜிஸ்ட்ரேசன் பதிவு செய்பவா்களுக்கு தானியங்கி முறையில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.