தமிழகத்தில் முதல்முறையாக,மேலே விமான ஓடுதளம் கீழே 4 வழிச்சாலை, சூப்பராக மாறப்போகும் மதுரை:
மதுரை விமான நிலையம் விரிவாக்கம் பணி:
மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், ராஜமுந்திரி, திருப்பதி போன்ற நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை தற்போது 7 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்தில் இருக்கிறது. இதனை 12 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. அத்துடன் பணிகளும் தொடங்கின. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி காரணமாக விரிவாக்கம் தாமதமாகியது.
460 ஏக்கர் பட்டா நிலங்கள் ;166 கோடி இழப்பீடு:
விமான நிலைய விரிவாக்கத்திற்காக அருகில் உள்ள அயன்பாப்பாக்குடி, பெருங்குடி உள்பட 6 கிராமங்களில் இருந்து சுமார் 460 ஏக்கர் பட்டா நிலங்களும், 615 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்படுகிறது நில உரிமையாளர்களுக்கு ரூ.166 கோடி ஒதுக்கீடு செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது 90 சதவீத கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளது.
சுற்றுச்சாலை துண்டிப்பு ஜெர்மன் பாணியில் சாலை:
விமான ஓடுதள விரிவாக்கம் காரணமாக மதுரை சுற்றுச்சாலை துண்டிக்கப்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்களுக்கு சிக்கல் ஏற்படும். எனவே சுற்றுச்சாலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெர்மனியில் உள்ள லெய்சிக் விமான நிலைய ஓடுதளத்திற்குள் கீழ் சாலை உள்ளது. அதாவது மேல் சாலையில் விமான ஓடுதளமும், கீழ் சாலையில் வாகன போக்குவரத்தும் இருக்கிறது. அதே போல் பிரதமர் மோடியின் தொகுதியான உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி லால்பகதூர் விமான நிலையமும் மேல்புற சாலையில் ஓடுதளமும், கீழ்புறத்தில் வாரணாசி- லக்னோ நான்கு வழிச்சாலையும் அமைக்கப்படிருக்கிறது.
நான்குவழிச்சாலை மேலே விமானம்:
இதே முறையில் மதுரையில் விமான ஓடுதளம் மேல்புறமும், கீழ்புறம் ரிங்ரோடு நான்குவழிச்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் கலெக்டர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் ஆகியோர் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் மதுரை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் ரமேஷ், சவுந்தர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம் குறித்தும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அண்டர்பாஸ் முறை அமைச்சர் உதயகுமார்:
கூட்டத்திற்கு பின் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்யும் வகையில் ரன்வேயை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது.. ஓடுதளம் விரிவாக்கத்திற்காக வாரணாசி விமான நிலையத்தை போல அண்டர்பாஸ் முறை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மேல் பகுதியில் விமான ஓடுதளமும், கீழ் பகுதியில் ரிங்ரோடு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டிருககிறது. இது குறித்து முழு அளவிலான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
Credit By Velmurugan P