அபுதாபியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலி; பொய்யான செய்தி 2 வருட சிறைதண்டனை:
நவம்பர்-5,2020
அபுதாபியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் கொரோனாவுக்கு பலி என்ற பொய்யான செய்தி வழங்கிய நபர் மற்றும் அதன் உண்மை தன்மை ஆராயாமல் செய்தி வெளியிட்ட பிரபல Ap-Sport செய்தி நிறுவனத்தின் Reporter-க்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் மத்தியில் பீதியை கிளப்பும் வகையில் பொய்யான செய்தி வெளியிட்ட குற்றத்திற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீரக அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு சம்பவம் அமீரகத்தில் எங்கும் நடக்கவில்லை என்று மேலும் விளக்கம் அளிக்கபட்டுள்ளது.
மேலும் சம்மந்தப்பட்ட செய்தி நிறுவனத்திற்கு செய்தியை வழங்கிய நபரை இரண்டு வருட சிறை தண்டனைக்கு பிறகு நாடு கடத்தப்படும் என்றும் நீதிமன்ற அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அப்படி ஒரு குடும்பம் அமீரகத்தில் எங்கும் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க நாட்டின் பெயரை கெடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்று அமீரக பேரிடர் மீட்பு அமைப்பின் தலைமை அதிகாரியும் விளக்கமளித்தார்.