சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது:
நிவர் புயல் கரையேறும் சமயங்களில், அதிவேகத்தில் பலத்த காற்று வீசுவதோடு, கனமழை முதல் அதிகனமழை வரையில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையிலிருந்து, இயக்கப்படும் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் அனைத்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று முதல் இன்று வரையில் பெய்த மழையால் ஏற்கனவே விமான நிலையத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள காரணங்களால் ஏற்கனவே பல விமானங்கள் தாமதமாக தரையிறங்கிய சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து நிவர் புயலின் எதிரொலி மற்றும் மழையால் ஓடுபாதை உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பட்ட தண்ணீர் தேக்கம் ஆகியவை காரணமாக இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியிலிருந்து நாளை காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது.
இதனால் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் எதுவும் புறப்படவோ, தரையிறங்கவோ செய்யப்பட மாட்டாது. புயலினால் காற்று வீசுவது வேகமாக இருப்பதாலும், நாளை காலை 7 மணிக்கும் அப்போதய சூழலை கவனத்தில் கொண்டே விமான சேவை தொடங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் அந்த அறிக்கையில் புயலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், 12 மணி நேரத்திற்கு, சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக, அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி விமானம் நிலைய நிலவரம்:
கூடுதல் தகவல்களின்படி குவைத்தில் இருந்து ஏர் இந்தியா விமானமும் மற்றும் ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் விமான நிலையம் நோக்கி வந்துகொண்டு இருக்கிறது. இதுபோல் விமான நிலையத்தில் இருந்து மஸ்கட்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சென்னையில் ரெயில்கள்,பேருந்துகளின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து போக்குவரத்து, புறநகர் ரெயில்சேவை, விரைவு ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று விடுமுறை கால அட்டவணையின்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இன்று காலை 7 மணி முதல் இரவு 10 வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட இருந்தது.
மெட்ரோ ரெயில் ஓடிக்கொண்டிருந்த நிலையில் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 7 மணியோடு மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை புயல், மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.