குவைத்தில் இதுவரை கொரோனா காரணமாக 8 குழந்தைகள் உயிரிழந்தனர்:
நவம்பர்-5,2020
குவைத்தில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 8 குழந்தைகள் உயிரிழந்தனர் என்று உள்ளூர் அரபு நாளேடு ஒன்று செய்தி சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் கட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை(நவம்பர்-4) வரையில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆகும். அவர்களில் 8 பேர் குழந்தைகள் என்று தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இறந்த குழந்தைகள் அனைவரும் 15 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களில் ஒரு மட்டும் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தை என்பது கூடுதல் தகவல். இறந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் 8 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
மேலும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது, அதாவது இறந்தவர்களில் பெரும்பாலோர் முன்னர் பிற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் பிறந்தது முதல் 15 வயது வரையில் பல்வேறு வகையான நேரடி நோய்த்தடுப்பு மருந்துகள் பயன்படுத்துவதால் குழந்தைகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது குறைவாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.இதனால் கோவிட் காரணமாக ஏற்படும் சிக்கல்களும் குழந்தைகளில் குறைவாகவே காணப்படுகின்றன.
மேலும் இறந்த 794 நபர்களின் விபரங்களை குவைத் சுகாதாரத்துறை நாடுகள் வாரியாக வெளியிடுவது சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தியதன் காரணமாக இவர்களில் எத்தனை பேர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.