தேர்தல் ஆணையம் அறிவிப்பு;வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்க வழிவகை:
Dec-1,2020
சாதாரணமாக தேர்தல் என்றால், ஊரில் இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதுபோல தபால்வாக்கு என்பது அனைவருக்குமானது அல்ல. தொழில் ரீதியாகவோ, படிப்புக்காகவோ இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். அப்படி, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களின் ஓட்டுகள் எப்போதும் வீணாகவே போகின்றன.
இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்ய இயலுமா என மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஏற்பாடு தயாராக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
இணையவழியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால், வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.