அமீரக சட்டத்தில் அதிரடி மாற்றங்கள் திருமணம் ஆகாதவர்கள் சேர்ந்து வாழ அனுமதி;மது விற்பனை சட்டத்தில் தளர்வு:
நவம்பர்-8,2020
அமீரகத்தில் இஸ்லாமிக் சட்டங்கள் பெரும்பாலும் கடைபிடிக்கப்படும் நிலையில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி அரச ஏஜென்சி தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி உரிமம் இன்றி மதுபானங்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகிய செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு கீழுள்ளவர்கள் மது அருந்தவும் அவர்களுக்கு மதுவை விற்கவும் அனுமதி இல்லை
திருமணம் ஆகாத ஆண், பெண் இருவரும் ஒன்றாக வசிப்பது குற்றமாக கருதப்பட்டுவந்த நிலையில், இனி இருவரும் சேர்ந்து வாழ்வது குற்றமாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 14 வயதுக்கு உட்பட்டவர்களுடன் அல்லது மனநோயாளிகளுடன் சம்மதத்தின் பேரில் தொடர்பில் இருந்தாலும் குற்றமாகக் கருதப்படும்.
ஆணவக் கொலைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகச் சட்டங்கள் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், பெண்கள் மீதான குற்றங்கள் இனி பிற குற்றங்களுக்கு இணையாக கருதப்படும் எனவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், தற்கொலையும் தற்கொலை முயற்சியும் ஒரு குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், அது தளர்த்தப்பட்டுள்ளது.
இதுபோல் சொத்துரிமை, உயில் ஆகியவற்றில் வெளிநாட்டினர் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.