துபாய் டிபிஎல் போட்டிக்கு தேர்வு;நிதியில்லாமல் தவிக்கும் மதுரை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்:
நவம்பர்-4,2020
துபாய் டிபிஎல் போட்டிக்கு தேர்வு ஆன நிலையிலும் நிதியில்லாமல் தவிக்கும் மதுரை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் அணியின் கேப்டனாக மதுரையை சேர்ந்த சச்சின் சிவா, துணை கேட்பனாக ராஜேஸ்குமார் ,சூர்யபிரகாஷ், அருண்குமார் ஆகிய 4 பேரும் மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் முறையான பயிற்சி பெற முடியாத அவல நிலை மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இணைந்து விளையாடும் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருகிற நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான டிபிஎல் போட்டி துபாயில் நடக்க உள்ளது.
இதில், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என ஐந்து அணிகள் விளையாட உள்ளன. இதில் தமிழக அணி சார்பில் சென்னை சூப்பர் ஸ்டார் அணி என்ற பெயரில் தமிழகத்தை சேர்ந்த மதுரை, அரியலூர் தேனி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், ஊட்டி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 15 மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுப்போன்று போட்டி முதல் வருடம் என்பதால் தமிழக அணி சார்பில் விளையாட உள்ள சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு இந்த மாதம் மதுரை மற்றும் தேனியில் நடைபெற்ற பயிற்சி முகாம் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து தேர்வுசெய்யப்பட்ட அணியினர் துபாய்க்கு விளையாட செல்லவுள்ளனர். அணியின் கேப்டனாக மதுரையை சேர்ந்த சச்சின் சிவா, துணை கேட்பனாக ராஜேஸ்குமார் ,சூர்யபிரகாஷ், அருண்குமார் ஆகிய 4பேரும் மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணி வீரர்கள் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் போட்டியில் கலந்துகொள்வதற்கான பயிற்சி மற்றும் பேட் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
[Note: நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ( 21.10.2020 ) உதகை உல்லத்தி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் எஸ்.ரவிசந்திரன் துபாய் நாட்டில் நடைபெறும் திவ்யாங் கிரிக்கெட் போட்டியில் ( DPL ) கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ - 25 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப . , அவர்கள் வழங்கினார்.]
ஆனால் அணியின் கேப்டன், துணை கேப்டன் அடங்கிய 4 மாற்றுத்திறனாளி வீரர்களும் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் சந்தித்து நிதியுதவி கோரியபோது மாவட்ட நிர்வாகத்தில் நிதி இல்லை என கூறியதோடு தனியார் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் மனம் துவண்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு தமிழ்நாட்டு அணிக்காக வீரர்கள் தேர்வுசெய்யப்பட்ட நிலையிலும் தாங்கள் அரசின் நிதி மறுப்பால் முறையான பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில் ஆதரவின்றி நிற்பதாக வேதனையுடன் காத்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக பல்லாயிரக்கணக்கான கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 1 லட்சம் ரூபாய் நிதி இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் ஆகியோர்களே பயிற்சி போட்டிக்கு செல்ல முடியாத நிலை என்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை வழங்கிவரும் விளம்பர நிறுவனங்களும், ஏலதாரர்களும் இது போன்ற மாற்றுதிறனாளி கிரிக்கெட் அணியை கண்டுகொள்ளாதது மாற்றுத்திறனாளிகளிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அணியின் கேப்டன் சிவா, தங்களின் நீண்டநாள் ஆசையான டிபிஎல் போட்டி வெளிநாட்டில் முதன்முறையாக நடைபெறுகிறது. போட்டியில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் நிதியின்மையால் செய்வதறியாது நிற்பதால் மத்திய மாநில அரசோ இல்லையனில் யாரேனும் தொண்டு நிறுவனங்களோ உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.