குவைத் கொரோனா தடுப்பூசியை அடுத்த மாதத்தில் இறக்குமதி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது:
நவம்பர்-10,2020
உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி நோயான கோவிட்க்கு எதிரான தடுப்பூசி பரிசோதனைகள் பெருமளவில் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் கம்பெனியில் இருந்து ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்யும். குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் இதற்கு முன்பு இது தொடர்பாக சுமார் 7.6 மில்லியன் தினார்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த தடுப்பூசி அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். தற்போது இந்த தடுப்பூசியின் 90 சதவீதம் சோதனைகள் வெற்றியை கண்டுள்ளது என்று ஃபைசர் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.இருப்பினும், ஃபைசருக்கும் குவைத் சுகாதார அமைச்சிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்த தடுப்பூசி இறக்குமதி செய்ய அமெரிக்காவின்மருந்து நிர்வாகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான் குவைத் சுகாதார அமைச்சகம் நிறுவனத்திலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய முடியும். இந்த ஒப்பந்தத்தின்படி, குவைத் சுகாதார அமைச்சகம் முதல் கட்டத்தில் 10 லட்சம்(மில்லியன்) தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும்.
முதல் கட்டத்தில், முதியவர்கள், நிரந்தரமாக குணமடையாத நோய்கள் உள்ளவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதார ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுகாதார அமைச்சின் உறுப்பினர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி மூன்று வார இடைவெளியில் இரண்டு முறை செலுத்தப்படுகிறது. அதாவது முதல்கட்டமாக இறக்குமதி செய்யபடும் 10 லட்சம் தடுப்பூசி மூலம் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி கிடைக்கும்.
18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அடுத்த கட்டத்தில், நாட்டிலுள்ள வெளிநாட்டினர் உட்பட அனைவருக்கும் இந்த தடுப்பூசி கிடைக்க பெறும் என்று சுகாதார அமைச்சகம் நம்புகிறது. இதற்கு சுமார் 40 லட்சம் அளவுக்கு டோஸ் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசிகள் வருவதற்கு முன்பு அவற்றை சேமிக்க ஒரு தனி குளிரூட்டப்பட்ட சேமிப்பு அமைப்பு அமைக்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசி மருந்துகள் மைனஸ் 80 டிகிரி வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.