நிவர் புயலின் காரணமாக திருச்சி மற்றும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் சேவைகள் பாதிப்பு:
சென்னையில் பெய்த கனமழை காரணமாக விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் வானில் வட்டமிட்டு பின்னர் மழை குறைந்ததும் தரையிறங்கியது. மேலும் மழை தொடர்ந்து பெய்தால் விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்படும் அல்லது ரத்து செய்யபடும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து 32 பயணிகளுடன் இரவு 8:35-க்கு மணிக்கு திருச்சி கிளம்புவதற்கு தயார் நிலையில் இருந்த விமானம் ரத்து செய்யபட்டது.
இதுபோல் நிவர் புயலின் காரணமாக திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் உள்நாட்டு சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் நாளை புதன்கிழமை சென்னை பெங்களூர் மற்றும் துபாய் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து திருச்சி வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பயணிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு இண்டிகோ விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாற்று விமான நிலையம் என்ற முறையில் மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்காத வண்ணம் கழிவுநீர் குழாய்கள் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்றும் விமான நிலையத்தின் சமிக்கை விளக்கு(சிக்னல் விளக்கும்) திறன் பரிசோதனை நடைபெற்று வருகின்றன.
Editor: Ktpnews Official