தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் கனடா பிரதமர்:
நவம்பர்-14,2020
இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட தீபாவளி கொண்டாட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில், “உண்மையும், வெளிச்சமும், நன்மையும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை தீபாவளி நினைவூட்டுகிறது. இந்த செய்தியை கொண்டாடுவதற்காக இன்று மாலை நடைபெற்ற காணொளிக் காட்சி வாயிலான நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி தலைவர் உள்பட கனடாவை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். கனடாவில் 1998ஆம் ஆண்டு முதல் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 20-வது முறையாக கனடாவில் தீபாவளி கொண்டாடப்படுவது கூடுதல் சிறப்பு.
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் தீபாவளி கொண்டாட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் காணொளிக் காட்சி வாயிலாக தீபாவளியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.