வெளிநாட்டில் இருந்து தாயகம் செல்லும் இந்தியர்கள் இதை செய்தால் தனிமைப்படுத்தல் தவிர்க்கலாம்:
நவம்பர்-8,2020
வெளிநாட்டில் இருந்து தாயகம் செல்லும் வெளிநாட்டவர்கள் 72 மணி நேரத்திற்குள் கிடைத்த பி.சி.ஆர் எதிர்மறை(Negative) சான்றிதழ் பெற்றிருந்தால் தனிமைப்படுத்தலைத்(Quarantine) தவிர்க்கலாம் என்று இந்திய சுகாதாரத்துறை விதிமுறைகளை மேற்கோள் காட்டி வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கான உங்கள் வாக்குமூல பத்திரத்தை(உறுதிமொழி) https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration என்ற இணைய தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தவறான வாக்குமூல பத்திரங்களை வழங்குவது தண்டனைக்குரியது. தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு தொடர்பான அனுமதி வழங்குவதற்கான இறுதி அதிகாரம் அமைச்சகத்திற்கு உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய உத்தரவுகளில் இது கூறப்பட்டுள்ளது.
கோவிட் எதிர்மறை சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் இந்தியாவில் தரையிறங்கும் விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழைப் பெற வேண்டும். இத்தகைய நபர்களுக்கும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம். ஆனால் ஆய்வு வசதிகள் இல்லாத விமான நிலையங்களுக்கு வருபவர்களுக்கு ஏழு நாள்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும்.
மேலும் அந்த அறிக்கையில் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறுபவர்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும். இதை தவிர வெளிநாட்டில் இருந்து தாயகம் செல்வோர் பயணம் செய்வதற்கு முன் விமான நிறுவனங்கள் அல்லது ஏஜென்சிகளை தொடர்பு கொண்டு என்ன செய்வது என்பது பற்றிய தெளிவான யோசனை பெற வேண்டும். உங்கள் தொலைபேசியில் ஆரோக்கிய சேது பயன்பாட்டைப் பதிவிறக்குவதை உறுதி செய்வது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
அதே நேரத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தலை நீக்குவது குறித்து தெளிவான வழிமுறைகள் இல்லை என்று அறியப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.