குவைத் திரும்ப விரும்பும் வெளிநாட்டினர் தங்கள் தகவல்களை பதிவு செய்ய இணையதளம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது:
Nov-17,2020
குவைத் சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாக துறை, நாட்டில் சுகாதார அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப திரும்பி வரும் பயணிகளை ஏற்றுக்கொள்ள அனைத்து பணியை முடித்துள்ளது. தடைசெய்யப்பட்ட 34 நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இயக்கம் தொடங்குவதற்கான தேதி வரும் நாட்களில் அதிகாரிகளால் கூட்டப்படும் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், செல்லுபடியாகும் வதிவிடல்(Validity Visa) உள்ளவர்கள் மட்டுமே நாட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் குவைத் திரும்ப விரும்பும் வெளிநாட்டவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை பதிவு செய்ய அதிகாரிகள் மின்னணு தளத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தித்தாள்களின்படி, சமூக விவகாரத்துறை அமைச்சரும் மற்றும் பொருளாதார விவகார துறை துணை அமைச்சருமான மரியம் அல் அகில் தலைமையில் அமைத்த அரசாங்கக் குழு, வெளிநாட்டினரின் திரும்பும் பயணம் குறித்து சிவில் ஏவியேஷன் பொது நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட திட்டம் குறித்து விவாதிக்கும்.
அதே நேரத்தில், வீட்டுத் தொழிலாளர்களை நேரடியாக குவைத்துக்கு திரும்ப அனுமதிப்பது நாட்டில் வீட்டுத் தொழிலாளர்கள் பற்றாக்குறையைத் தணிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். காலப்போக்கில் மற்ற தொழிலாளர்கள் குவைத்துக்கு திரும்புவது குறித்து முடிவு செய்வார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் நுழைவு தடைசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து வீட்டுத் தொழிலாளர்கள் திருப்பி வர அனுப்பப்படுவார்கள், பின்னர் அரசாங்கத் துறை மற்றும் பிற தொழிற்துறை தொழிலாளர்கள் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.