குவைத்தில் நாளை 18-வது பாராளுமன்ற தேர்தல் சிறப்பு செய்தி தொகுப்பு:
Dec-04,2020
குவைத்தில் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் சனிக்கிழமை(05/12/20) நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவும் சூழலில், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதன் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் அனைத்தும் செய்யபட்டுள்ளது. இந்த தேர்தலில் 273,940 ஆண்கள் மற்றும் 293,754 பெண்கள் உட்பட மொத்தம் 567,694 பேர் நாளை வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவார்கள். இவர்களில் 43 பேர் தற்போதைய எம்.பி ஆவார்கள்.
மொத்தம் ஐந்து தொகுதிகளில் தேர்தல் நடைபெறும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிகபட்சமாக வாக்குபெறும் 10 பேர் வீதம் தேர்தெடுக்கப்படுவார்கள். குவைத்தில் 2012-வரையில், ஒரு வாக்காளர் 4 வாக்குகள் வரையில் பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நடைமுறை மூலம் ஓட்டு வியாபாரம் அதிக அளவில் நடக்கிறது என்ற புகார் அடிப்படையில் தேர்தல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யபட்டு ஒருவருக்கு ஒரே ஓட்டு என்ற நடைமுறை அமலில் வந்தது. இத்துடன் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க சட்டதிருத்தமும் கொண்டுவந்தனர்.
தேர்தல் சீர்திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் 2012-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் 3 பெண்கள் நாடாளுமன்றத்திற்குள் முதல் முறையாக எம்.பி-களாக நுழைந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில், பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கை ஒன்றாக சுருங்கியது. குவைத்தில் உள்ள வெளிநாட்டினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய அறிக்கைகளை எப்போதும் வெளியிட்டு வரும் சஃபா அல்-ஹாஷிமி, கடந்த மூன்று நாடாளுமன்றங்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்ற ஒரே பெண் எம்.பியாக முன்னிலையில் உள்ளார்.
இதையடுத்து அப்போதைய தேர்தலில் சட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் பழங்குடி தலைவர்கள் உட்பட பலர் போட்டியிலிருந்து விலகி இருந்தனர். இதன் மூலம், 2016 வரை மூன்று தேர்தல்கள் நடந்திருந்தாலும், பாராளுமன்றம் உறுப்பினர்கள் தங்கள் பதிவி காலங்களை(காலாவதியாகாமல்) முடிப்பதற்கு முன்பு பல்வேறு காரணங்களால் மூன்றுமே கலைக்கப்பட்டது. 2016-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய பாராளுமன்றம் உறுப்பினர்கள், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் பதவிக்காலம் நிறைவடைந்த முதல் பாராளுமன்றம் அவை இதுவாகும்.
குவைத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் உள்ளது முதல் தொகுதியில் ஆகும். இந்த தொகுதியில் மொத்தம் 166222 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 84777 ஆண்களும் மற்றும் 81445 பெண்களும் உள்ளனர். நாட்டின் முக்கிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களான அஸ்மி, அஜ்மி, ஹஜாரி மற்றும் ஒடாய்பி ஆகியோருக்கு அதிக ஆதிக்கம் உள்ள தொகுதி இதுவாகும். மேலும் இப்பகுதியில் ஷியா பிரிவினர் ஆதிக்கமும் சிறிதளவு உள்ளது.
முத்தாரி,ரஷிடி, அன்சி மற்றும் ஷம்மாரி இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் நான்காவது பெரிய தொகுதியில் மொத்தம் 150,193 வாக்காளர்களைக் கொண்டுள்ளது, இதில் 70080 ஆண்கள் மற்றும் 80,113 பெண்கள் உள்ளனர்.
நாட்டில் உள்ள நகர்ப்புறவாசிகள் மற்றும் பழங்குடியினர் உள்ளடக்கிய மக்கள் வசிக்கும் மூன்றாவது தொகுதியில் மொத்தம் 101492 வாக்காளர்கள் உள்ளனர், இதில் 47228 ஆண்கள் மற்றும் 54264 பெண்கள் உள்ளனர். இது நகரத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க சுன்னி மற்றும் ஷியா பிரிவினரை உள்ளடங்கிய பகுதி ஆகும்.
நாட்டின் பொருளாதார, சமூக, கலாச்சார துறைகளை சேர்ந்தவர்கள், மத பிரமுகர்கள் மற்றும் மூத்த அரசு துறை அதிகாரிகள் உள்ளடக்கிய இரண்டாவது தொகுதியில் மொத்தம் 64,965 பேர் வாக்காளர்கள் ஆவார்கள். இவர்களில் 31303 ஆண்கள், 33662 பெண்கள்.
நகர்ப்புறங்களை உள்ளடக்கிய முதல் தொகுதியில் மொத்தம் 84,822 வாக்காளராக உள்ளனர், இதில் 40,552 ஆண்கள் மற்றும் 44,270 பெண்கள் உள்ளனர். ஷியா பிரிவினருக்கு அதிக ஆதிக்கம் உள்ள இந்த தொகுதியில், இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கமும்(ஹடாஸ்) ஆதிக்கம் செலுத்துகிறது.
கொரோனா சூழலில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுடன் வாக்களிப்பு நடைபெறும். இந்த தேர்தலில் கோவிட் நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 30,000 தினார்கள் அபராதமும் விதிக்கப்படும். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தவும் மற்றும் பேரணிகள் நடத்தவும் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன.
Editing: Ktpnews Official