Dec-22,2020
குவைத் அரசு பிரிட்டனில் புதிதாக உருவாக்கியுள்ள மரபணு மாற்றமான கோவிட் வைரஸ் தீவிரமாக பரவலைத் தொடர்ந்து எல்லைகளை தற்காலிகமாக ஜனவரி-1,2021 வரையில் மூடியுள்ளது.இந்த அறிவிப்பு காரணமாக அடுத்த 10 நாட்களில் பல்வேறு நாடுகளுக்கு குவைத் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த மற்றும் வரவேண்டிய 600 விமானங்கள் வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளது இதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்த 50,000 பேரின் பயணங்கள் தடைபட்டது. இது விமானத் துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கொரோனா பிரச்சினை ஓரளவுக்கு குறைந்த நிலையில் கடந்த சில நாள்களாக, குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக தினமும் சுமார் 60 விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினசரி பயணிகளின் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் மீண்டும் விமான நிலையத்தை உடனடியாக மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குவைத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து, விமான துறை மற்றும் சுற்றுலா துறையில் குழப்பம் ஏற்பட்டது,இதன் விளைவாக ஆயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கள் முன்பதிவை ரத்து செய்வதற்கான முடிவை எடுத்துள்ளனர்.மேலும் இந்த புதிய உத்தரவு காரணமாக குவைத்தில் நுழைய, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் காத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களில் பலரது விடுமுறைகள் முடிந்துவிட்டன மற்றும் சிலரின் விடுமுறை நாட்கள் முடிவடையும் நிலையில் உள்ளது.
குவைத் பயண மற்றும் சுற்றுலா துறை அமைப்பின் தலைவர் முஹம்மது அல்-முத்தாரி இந்த அறிவிப்புக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட முன்பதிவுகளின் மதிப்பு சுமார் 10 மில்லியன் தினார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, குறிப்பாக புத்தாண்டு விடுமுறைக்காக வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டவர்கள் இதில் அடங்குவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்