Dec-21,2020
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து கடந்த 10 நாட்களுக்குள் குவைத்துக்குள் நுழைந்த அனைவரும் மீண்டும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் இன்று(21/12/20) மாலையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து கடந்த டிசம்பர் 11 முதல் 21 வரை குவைத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். நாட்டிற்குள் நுழைந்த நாளிலிருந்து 5 முதல் 10 நாட்களுக்குள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். இதற்காக ஜாபர் அல் அகமது மருத்துவமனையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீங்கள் செல்ல வேண்டும்.
அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த காலகட்டத்தில் நாட்டிற்குள் நுழைந்த குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். பரிசோதனைக்கு செல்லும் நபர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் நாட்டிற்குள் நுழைந்ததற்கான ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவிரமாக பரவி வருகின்ற மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவுவதன் பின்னணியில் இந்த நடவடிக்கை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நோய்தொற்று பரவல் காரணமாக நேற்றைய தினம் குவைத் இங்கிலாந்தின் இரண்டு வழி விமானங்கள் சேவைகள் அனைத்திற்கும் தற்காலிக தடை விதித்துள்ளது.