குவைத்தில் குடியிருப்பு சட்டங்களை மீறியவர்கள் அபராதம் செலுத்திய பின்னர் நாட்டைவிட்டு வெளியேறவோ அல்லது குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை சட்டப்பூர்வமாக்க அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவை ஜனவரி 31 வரை நீட்டித்துள்ளது. இந்த உத்தரவை சற்றுமுன் உள்துறை அமைச்சர் ஷேக் தாமர் அலி வெளியிட்டார். மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் வைரஸ் பரவியதை அடுத்து இந்த மாதம் ஜனவரி 21 முதல் ஜனவரி 2 வரை குவைத் விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கடந்த மாதம், உள்துறை அமைச்சகம் ஒரு பகுதி பொது மன்னிப்பை அறிவித்தது, 2020 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அபராதம் செலுத்தி நாட்டை விட்டு வெளியேற அல்லது குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை சட்டப்பூர்வமாக்க அனுமதித்தது. இதற்காக காலக்கெடு டிசம்பர் 1 முதல் 31 வரை என்று அறிவித்திருந்து. ஆனால் இதற்கிடையில், விமான நிலையத்தை எதிர்பாராத விதமாக மூடியதால் பலருக்கு பயணிக்க முடியவில்லை. இந்த சூழலில் இன்று காலக்கெடுவை ஜனவரி 31,2021 வரை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் அறிக்கையில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது புதிதாக ஒதுக்கப்பட்ட கால எல்லைக்கு முன்னர் தங்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று அமைச்சகம் கோரியுள்ளது. காலக்கெடுவுக்குப் பிறகு பிடிபடுபவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைய முடியாதபடி கைரேகை வைத்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.