தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு குடும்பத்தினர் செய்த நன்றிக்கடன்:
Dec-7,2020
அவர்களுக்கு கவிதா ஒரு உதவியாளர் மட்டுமல்ல மகள்தான், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சூரை அடுத்த திரிபிரயார் பகுதியில் ஒரு வீட்டிற்கு வேலைக்கு வந்தவர் கவிதா.
விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற ரசாக் மற்றும் அவரது மனைவி நூர்ஜஹான் ஆகியோருக்கு கவிதா ஒரு மகள். கடந்த பதினான்கு ஆண்டுகளாக, கவிதா இருவரையும் தனது தந்தை மற்றும் தாயாகவே பார்த்திருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து கவிதாவின் தந்தையும் தாயும் வருடத்திற்கு ஒரு முறை கவிதையைப் பார்க்க வருவார்கள்.
குடும்ப உறுப்பினரைப் போல இவ்வளவு காலமாக சிறுமியை கவனித்துக் கொண்டிருந்த குடும்பத்தினர், அவள் நினைத்துக்கூட பார்க்காத ஒரு கனவு பரிசை வழங்க தீர்மானித்து திருமண ஏற்பாடுகளை செய்தனர். மேலும் இதை கவிதாவுக்கு செய்ய வேண்டிய ததங்களுடைய கடமை என்று ரசாக் மற்றும் குடும்பத்தினர் கருதினர். மணமகன் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர். கொரோனா விதிமுறை அடிப்படையில் எளிதாக இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
மேலும் ரசாக்கின் குடும்பத்தினர் அவருக்கு(கவிதாவுக்கு) திருமண பரிசாக பன்னிரண்டு சவரன் நகைகளையும், தன்னுடைய வீட்டின் பக்கத்திலேயே நான்கு சென்ட் நிலத்திலும் ஒரு புதிய வீட்டைக்கட்டி அதன் சாவியையும் திருமண நாளில் பரிசாக வழங்கினார்கள். தொடர்ந்து ரசாக் கூறுகையில் இன்பத்திலும்,துன்பத்திலும் கைபிடித்து உடன்நடக்க ஒரு துணையையும், வீட்டையும் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி என்று கூறினார். இதுபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் மற்றொரு தமிழ் பெண்ணுக்கு திருமணம் நடந்த செய்தியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.