Dec-22,2020
பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது. நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமானதாக இருந்தது. கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை உடையதாகவும், வீரியமாக இருப்பதாவும் தெரியவந்தது.
இந்த புதிய வகை வைரஸுக்கு ‘VUI 202012/01’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் இத்தாலி, இந்தியா, சவுதி,ஓமன் குவைத்,ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இங்கிலாந்தில் இருந்து மட்டுமின்றி அனைத்து நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்று கூறினார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் 7 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதே போன்று கர்நாடக அரசும் பெங்களூரு, மற்றும் மங்களூரு விமான நிலையம் வழியாக இங்கிலாந்தில் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் இருந்து நாடு திரும்பியவர்களின் பட்டியலை பெற்று பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.