Dec-17,2020
சவுதி அரேபியா இன்று கொரோனவுக்கு எதிரான தடுப்பூசியை நாட்டில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை துவங்கியது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படும் நிகழ்வு தலைநகர் ரியாத்தில் ஒரு சுகாதார மையத்தில் தொடங்கியது.
சவுதியின் சுகாதார அமைச்சர் தவ்பிக்-அல்-ரபியாக் நேற்று புதன்கிழமை சவுதி அரேபியா கோவிட் -19 தடுப்பூசிகளை பெற்றதாகவும், அடுத்த மூன்று நாட்களில் தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று(17/12/20) வியாழக்கிழமை அமைச்சர் அல்-ரபியாக் அவர்களுக்கு செவிலியர் தடுப்பூசியை செலுத்தினார், பின்னர் அவர் இந்த கொரோனா நோயினை நிரந்தரமாக ஒழிப்பதற்காக முதல்படி இதுவென்றார். மேலும் தடுப்பூசி சவுதி அரேபியாவில் உள்ள குடிமக்களுக்கும் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் "இலவசம்" என்றார்.தொடர்ந்து தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் இலவசம் என்பதை ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக கடந்த வாரம், சவுதி சுகாதார அதிகாரிகள் நாட்டில் இறக்குமதி மற்றும் பயன்பாட்டிற்காக கோவிட்-19 க்கு எதிராக ஃபைசர்-பயோடெக் தடுப்பூசியை பல்வேறுபட்ட சோதனைகளுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தடுப்பூசி பெறுவதற்கு லட்சக்கணக்கான மக்கள் இதுவரையில் முன்பதிவு செய்துள்ளனர்.