Dec-22,2020
குவைத்தில் நுழைய தடைசெய்யப்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேரடியாக நுழைய முடியாத காரணத்தால் அவர்கள் துபாய் உள்ளிட்ட சில நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்டு PCR சான்று பெற்று குவைத்தில் நுழைந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில்,குவைத் அரசு நேற்று திடிரென வான்வழி உள்ளிட்ட அனைத்து எல்லைகளையும் தற்காலிகமாக புத்தாண்டு வரையில் மூடியது. இதனால் தற்காலிக புகலிட நாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் குவைத்தில் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில்க் கொண்டு இவர்களை மட்டும் அழைத்துவர குவைத் விமான நிலையத்தை தற்காலிகமாக திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக குவைத் சிவில் விமான அதிகாரிகள், விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குவைத்தின் பல்வேறு தினசரி அரபு நாளிதழ்கள் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. முக்கியமாக செல்லுபடியாகும் குடியிருப்பு ஆவணங்கள் உள்ளவர்கள் மற்றும் தற்காலிக புகலிட நாடுகளில் 14 நாட்கள் தங்கியிருப்பவர்களை அழைத்துவரவே இந்த பேச்சுவார்த்தை எனவும், இவர்கள் குவைத்தில் நுழைய பி.சி.ஆர் சான்றிதழ் கைவசம் வைத்திருக்க வேண்டும். துபாய், அபுதாபி, தோஹா மற்றும் பெய்ரூட் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் அழைத்து வரப்பாடுவார்கள் என்று தெரிகிறது.
இது குறித்த கூடுதல் தகவல்கள் வரும் மணி நேரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
.