Dec-24,2020
குவைத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்பு கொண்டிருந்த 6 சிறுவர்களை குவைத் தேசிய பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். ரகசிய தகவல்களின் அடிப்படையில் அஹ்மதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தேசிய பாதுகாப்புப் படையினர்(NSF) வீட்டிலிருந்து ஏராளமான துப்பாக்கிகள், பல கணினிகள் மற்றும் ஐ.எஸ் அமைப்புடன் தகவல் தொடர்பு கொண்டிருந்த பல ஆவணங்களையும் கண்டறிந்துள்ளனர். விசாரணையில் அந்த சிறுவன் பலருக்கும் தீவிரவாத கருத்துக்களை பரப்பியதும் தெரியவந்துள்ளது. முக்கிய குற்றம் சாட்டப்பட்ட இளைஞன், ஒரு பிரபலமான ஆன்லைன் விளையாட்டு மூலம் தான் முதலில் ஐ.எஸ் முகவரை தொடர்பு கொண்டாத அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளான். மேலும் ஒரு வாரம் கழித்து, அவரை சமூக ஊடகங்கள் வழியாக தொடர்பு கொண்டு தீவிரவாத யோசனைகளை ஏற்று அதன்படி செயல்பட கூறியதாகவும், அந்த சிறுவன் கூறியுள்ளான்.
தொடர்ந்து ஐ.எஸ் கொடியை அறையில் வரையவும், மேலும் நண்பர்களை குழுவில் சேர்க்கவும், நிதி உதவி வழங்குவதாக அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பிரதான குற்றவாளி அதிகாரிகளிடம் கூறுகையில் இது குறித்து தனது நெருங்கிய நண்பருடன் பேசியதாகவும், மேலும் நான்கு பேரை குழுவில் சேர்த்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து மேலாதிக விசாரணைக்காக இவர்கள் அனைவரும் சிறுவர் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.