சவுதியில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றுடன் குவைத்தில் நுழைந்த லாரி ஒன்றை குவைத் உள்துறை அமைச்சக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். குவைத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (ஜிஏடிசி), சவுதி உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து, துல்லியமாக கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் கேப்டகன் வகையை சேர்ந்த இரண்டு மில்லியன் மாத்திரைகள், வெவ்வேறு வகையான ஒன்பது ஆயுதங்கள் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
வீடியோ Link:https://fb.watch/2r_Ug33MLD/
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையின் போது, அவர்கள் அருகிலுள்ள நாட்டிற்கு கடத்தி செல்ல குவைத்திற்கு எடுத்து வந்ததாக தெரிவித்து உள்ளனர்.அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குவைத்தின் Al-Wafra பகுதியில் ஒரு சரக்கு டிரக் டிரெய்லருக்குள் இருந்து இவை கைப்பற்றப்பட்டது. லாரியில் போதைப்பொருள் இருப்பதாக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட குவைத் சட்டதுறையின் அனுமதி பெற்று வாகனம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
குவைத் உள்துறை மந்திரி ஷேக் தாமர் அல் அலி அல் சபா மற்றும் அமைச்சக துணை செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இசம் சேலம் அல் நஹ்யாம் நேற்று வியாழக்கிழமை தனிப்பட்ட முறையில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளை ஆய்வு செய்து மதிப்பீடு செய்தனர். விசாரணையில் ஒத்துழைத்தமைக்காக குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் தாமர் அல் அலி அல் சபா அவர்கள் சவுதி அமைச்சரான இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சவுத் பின் நயீப் மற்றும் சவுதி உள்துறை அமைச்சகத்திற்கு நன்றியை தெரிவித்தனர்.