Dec-17,2020
ஓமானின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 103 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 10 நாள் விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று கடந்த வாரம் ஓமான் அரசு அறிவித்தது. இருப்பினும், இந்தியா உட்பட 27 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஓமானுக்கு இலவசமாக நுழைவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்று ஓமான் விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, எகிப்து, மொராக்கோ மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,யு.கே, ஜப்பான் மற்றும் ஷென்கான் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நாடுகளின் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருந்தாலோ அல்லது இந்த நாடுகளின் செல்லுபடியாகும் விசாவை கைவசம் வைத்திருந்தால் மட்டுமே ஓமானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
இதுபோல் உஸ்பெகிஸ்தான், பெலாரஸ், அஜர்பைஜான், தஜிகிஸ்தான், கோஸ்டாரிகா, கிர்கிஸ்தான், நிகரகுவா, ஆர்மீனியா, பனாமா, போஸ்னியா, ஹெர்சகோவினா, துர்க்மெனிஸ்தான்,ஹோண்டுராஸ், குவாத்தமாலா, கஜகஸ்தான், லாவோஸ், அல்பேனியா, சல்பானோர், வியட்நாம்,கியூபா, மாலத்தீவு, பூட்டான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் ஓமானுக்குள் நுழைய மேற்குறிப்பிட்ட நிபந்தனை பின்பற்ற வேண்டும்.
இருப்பினும், ஓமானில் தற்போதைய விசா நடைமுறையின் கீழ் பார்வையாளர்களுக்கு சுற்றுலா விசாக்கள் கிடைக்கின்றன என்று ஓமானின் விமான நிலையத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளன. மேலும் தற்போது அறிவிக்கப்பட்ட புதிய இலவச விசாவின் கீழ் தகுதியுள்ள சுற்றுலாப் பயணிகள் பத்து நாள் ஓமானில் தங்கும் விசாவைப் பெற முடியும். நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஓமானில் தங்கும் ஹோட்டலின் உறுதிப்படுத்தல் ஆவணங்கள், சுகாதார காப்பீடு மற்றும் திரும்புவதற்கான விமான டிக்கெட் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.