Dec-22,2020
பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் மரபியல் மாற்றமடைந்த அதிதீவிர கோரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
பிரிட்டனிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் , தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகளை இன்று காலை நேரில் ஆய்வு செய்தார் .
அப்போது அவர் கூறியதாவது , பிரிட்டனிலிருந்து தில்லி வழியாக சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து , கடந்த 10 நாள்களில் பிரிட்டனில் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது .
கடந்த 10 நாள்களில் பல்வேறு நாடுகளிலிருந்து பிரிட்டன் வழியாக சென்னை வந்த 1,088 பேர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது , அரசின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால் , பிரிட்டனில் பரவி வரும் அதிதீவிர கொரோனா வைரஸ் குறித்த மக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை .
கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள நாம் ஏற்கனவே பின்பற்றி வரும் முகக்கவசம் அணிதல் , தனிமனித இடைவெளி , கூட்டமான மற்றும் மூடிய அறைகளில் இருப்பதை தவிர்த்தல் போன்றவற்றை மக்கள் தொடர்ந்து பின்பற்றினாலே போதும் . சென்னை வந்திருக்கும் நபருக்கு பாதித்திருக்கும் கொரோனா , வீரியமிக்க கொரோனாவா என்பது பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும் . அவர் இயல்பாகவே இருக்கிறார்.
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவர் தற்போது கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .மேலும் , பிரிட்டனிலிருந்து வேறு நாடுகள் வழியாக தமிழகம் வருவோரும் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் .