Dec-20,2020
அமெரிக்க இராணுவத்தின் மத்திய குற்றப் புலனாய்வு(சிஐடி) சிறப்பு பிரிவு இந்த தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளனர். அதில் குவைத் சட்டங்களை மீறி பன்றி இறைச்சி தங்கள் முகாம்களில் இருந்து கடத்தப்பட்டு கறுப்பு சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இராணுவ குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக Task-Purpose.com தெரிவித்துள்ளது. இது நாட்டிற்கு வெளியேயுள்ள இராணுவ முகாம்கள் பற்றி அறிக்கைகளை செய்தியாக வெளியிடும் ஒரு ஊடகமாகும். குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் வீரர்களுக்கு பன்றி இறைச்சி விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
சில வீரர்கள் முகாமினுள் அவர்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி சுமார் $ 30-க்கு வாங்குவதாகவும், பின்னர் அவற்றைக் கடத்தி கறுப்புச் சந்தையில் சுமார் $ 200-க்கு விற்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நம்பிக்கையின் படி, பன்றி இறைச்சி சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, இவற்றை நாட்டில் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. குவைத்தில் பன்றி இறைச்சி விற்பனை மற்றும் உபயோகப்படுத்தல் ஆகியவை 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும்.