Dec-18,2020
பொதுமக்களின் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை மோசடி செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றது என்றும், இது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஷார்ஜா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது போன்ற திருடர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காவல்துறை ஒரு வீடியோ மற்றும் செய்தியையும் நேற்று வெளியிட்டது. காவல்துறையினர் வெளியிட்டுள்ள வீடியோ கவனத்தை திசை திருப்ப மோசடிகாரர்கள் பயன்படுத்தும் பல்வேறு யுத்திகளை விளக்குகிறது.
இவற்றில் மிக முக்கியமானது உங்களின் மிக அருகில் வந்து தும்முவது அல்லது உங்கள் உடலில் துப்புவது. இந்த கட்டத்தில், நீங்கள் திடீரென்று கவனத்தை இழந்தால், குழுவில் உள்ள வேறு ஒருவர் உங்கள் பணப்பையை அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களை திருடுவார்.
திடிரென பின்தொடர்ந்து வந்து உங்கள் வாகனத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக அந்நியர்கள் எச்சரிப்பதை நம்ப வேண்டாம் எனவும், நீங்கள் வெளியே வந்து அவர்களுடன் சேர்ந்து உங்கள் வாகனத்தை பரிசோதிக்கும் போது, வேறொருவர் வாகனத்தில் வைக்கப்பட்ட பொருட்களை திருடுவார்.
மேலும், வாகனங்களில் ஓட்டுநர் இருக்கையில் பணம் அல்லது விலையுயர்ந்த பொருள் உள்ள பைகளை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அது திருடர்களின் கவனத்தை ஈர்க்கும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.