அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சமூக ஊடகங்களில் உலக அளவில் அதிகம் பின்தொடர்பவர்களில் ஒருவர் ஆவார். இந்நிலையில் ஷேக் முகமது, டிக்-டாக்கில் முதல் வீடியோவை தனது சொந்த குரலில் வெளியிட்டார். இதையடுத்து முதல் வீடியோவே சில நிமிடங்களில் பல விருப்பங்கள், கருத்துகள் மற்றும் பகிர்வுகளைப் பெற்றது.
அவரது 50 ஆண்டுகால பொது சேவை அனுபவம், சமூகத்தில் தன்னுடைய பங்கை குறித்தும் மற்றும் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்ல தேவையான மாற்றங்களைச் செய்ய இளைஞர்களுக்கான அழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய வீடியோவை முதல்முறையாக பதிவேற்றியுள்ளார். பெரும்பான்மையான இளம் சமூக ஊடக பயனர்களுடனான தனது உறவின் ஒரு பகுதியாக துபாயின் ஆட்சியாளர் டிக்-டாக்யில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை துவங்கியுள்ளார்.
டிக்-டாக் உலகம் முழுவதும் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். "மக்கள் இருக்கும் இடத்தில் தானும் இருக்க விரும்புகிறேன்"என்று,அவர் புதிய டிக்-டாக் கணக்கை தொடங்கியது தொடர்பான அறிவிப்பு வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறினார். மேலும் இளைஞர்களின் கருத்துக்களைக் கேட்கவும், நம்முடைய விஷயங்களை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.