அபுதாபியில் நுழைய கடுமையான புதிய கட்டுபாடுகள்;48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் தேவை, உள்ளிட்ட நடைமுறை பிப்ரவரி-1 முதல்
Image credit: Abudhabi Police Official
அபுதாபியில் நுழைய கடுமையான புதிய கட்டுபாடுகள்;பிப்ரவரி-1 முதல் நடைமுறையில்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல்வேறு அமீரகங்களில் வசிப்பவர்களுக்கு அபுதாபியில் நுழைவதற்கான நடைமுறைகள் இரண்டாவது முறையாக மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழுவானது அபுதாபியில் நுழைவதற்கான நடைமுறைகள் குறித்த விவரங்களை இன்று(30/01/21) சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.பிப்ரவரி 1 திங்கள்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை கட்டுபடுத்தும் வகையில் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் பி.சி.ஆர் பரிசோதனையின் எதிர்மறை சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அபுதாபியில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். நான்கு நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் அபுதாபியில் தங்கியிருந்தால், நான்காவது மற்றும் எட்டாம் நாளில் கோவிட் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மேலும் புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின்படி, ஒரு நபர் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட டிபிஐ சோதனையின் எதிர்மறை சான்றிதழுடன் அபுதாபியில் நுழைய முடியும். இருப்பினும், டிபிஐ பரிசோதனை முடிவுகளைக் காண்பிப்பதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு முறை அபுதாபியில் நுழைய முடியாது. டிபிஐ சோதனை முடிவுகளுடன் அபுதாபியில் நுழைவோர் 48 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தங்கியிருந்தால் மூன்றாம் நாளில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அதுபோல் நீங்கள் ஏழு நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள்அபுதாபியில் தங்கியிருந்தால், ஏழாம் நாளில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்து ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்களுக்கும் ,குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், சோதனை அடிப்படையில் நடைபெற்ற தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் நாட்டின் தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் அல்-ஹொசைன் பயன்பாட்டில் செயலில் Active I-con பெற்றவர்களுக்கும் விலக்கப்பட்டுள்ளது.