இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு துறையின் அதிகாரி சோமானி இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டில் கோவிஷீல்டு,கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி பயன்படுத்த அனுமதி வழங்கி மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்து செய்தது என்றார். கோவிஷீல்டு பரிசோதனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தோம், 2 நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது தெரியவந்துள்ளது.மேலும் இந்த 2 தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பராமரிக்கலாம் என்றார்.
இதையடுத்து தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளை வாழ்த்துக்கள். அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது அனைத்து இந்தியர்களையும் பெருமை அடையச்செய்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
மேலும், தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமானி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பாதுகாப்பில் சிறிதளவு குறைபாடு இருந்தாலும் நாங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்க மாட்டோம். தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை. லேசான காய்ச்சல், உடல் வலி, ஒவ்வாமை போன்றவை எந்த ஒரு தடுப்பூசிகளுக்கும் பொதுவானவைதான் என்றார்