குவைத் இந்திய தூதரக அதிகாரிகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் போலியான தொலைபேசி அழைப்புகள் வருவது குறித்து,குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள்(இந்தியர்கள்) எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய தூதரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ள ஏமாற்றுப் பேர்வழிகள் இந்திய தூதரக அதிகாரிகள் என்று கூறி வெளிநாட்டினரை நம்பவைத்து,பின்னர் வங்கி விவரங்களை சேகரித்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருவது தொடர்பான புகார்கள்,அதிகாரிகள் கவனத்திற்கு வந்துள்ளது.
குவைத்தில் உள்ள இந்தியர்கள் யாரிடமும் இதுபோன்று உங்கள் தனிப்பட்ட வங்கி விபரங்கள், பணம் செலுத்துதல் மற்றும் பிற பணபரிவர்த்தனைகள் தொடர்பான எந்தவிதமான தகவலையும் தொலைபேசி வழியாகவோ அல்லது அங்கீகரிக்கப்படாத பிறவழிமுறைகள் பயன்படுத்தி கேட்கமாட்டார்கள் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குவைத்தில் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வங்கி அல்லது பிற பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை யாருடனும் எந்தவொரு காரணத்திற்காகவும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
இந்திய தூதரகம் வழங்கும் சேவைகள் தொடர்பான நடைமுறைகள் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.indembkwt.gov.in/ -யில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே தூதரகம் சம்பந்தப்பட்ட இதேபோன்ற போலியான அழைப்புகள் தொடர்பாக அனைவரையும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற மோசடி முயற்சிகளில் தெரியாமல் சிக்கி இரையாக வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது. இதுபோன்ற போலி அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக hoc.kuwait@mea.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கலாம் என்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது