குவைத்தில் விமானப் போக்குவரத்து 10 நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குவைத் விமான நிலையத்திற்கு விமானங்கள் மீண்டும் வரத் தொடங்கி உள்ளது. உலகளவில் மரபணு மாற்றப்பட்ட கோவிட் வைரஸ் பரவியதை அடுத்து கடந்த டிசம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு நிலம், விமானம் மற்றும் கடல் வழித்தடங்களை மூட குவைத் முடிவு செய்தது.
இதன் பிறகு அமைச்சரவை கூட்டத்தில் ஜனவரி-2 முதல் எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் முதல் விமானம் இன்று காலை துருக்கி மற்றும் துபாய் பயணிகளுடன் குவைத் வந்தது. இன்று முதல்நாள் மொத்தம் 67 சேவைகள் குவைத் விமான நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. இதில் 37 விமானங்கள் குவைத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் 30 விமானங்கள் விமான நிலையம் வந்து சேரும்.
இதற்கிடைய ஏர் இந்தியா இந்த மாதம் 31 ஆம் தேதி வரையிலான இந்தியாவுக்கான சேவைகளை அறிவித்துள்ளது. இதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது முதல் சேவையை இன்று விஜயவாடாவுக்கு இயக்குகிறது. ஜசீரா ஏர்வேஸ் மற்றும் குவைத் ஏர்வேஸ் ஆகியவையும் இன்று முதல் இந்தியாவுக்கு சேவைகளைத் தொடங்கின என்பது குறி்ப்பிடத்தக்கது.