(பிரதமர் மற்றும் ஆமீர் சற்றுமுன் சந்திப்பு)
குவைத்தின் பிரதமர் ஷேக் சபா அல்-காலித் அல்-சபா சற்றுமுன் அமீரை நேரடியாக சந்தித்து தனது ராஜினாமாவை வழங்கினார். நேற்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமாக்களை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். ஷேக் சபா அல்-காலித் அல்-சபா, கடந்த டிசம்பர் 5 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமீர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவால் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமரை குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி கள் சார்பில் சபாநாயகருக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தனர். அமைச்சர்கள் உட்பட 65 பேர் கொண்ட குவைத் நாடாளுமன்றத்தில், 38 உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து 29 நாள்கள் மட்டுமே ஆயுட்காலம் இருந்த புதிய அமைச்சரவை தனது ராஜினாமாவை இன்று சமர்ப்பித்துள்ளது.
ஷேக் ஜபீர் அல் - முபாரக் அல் - சபா பதவி விலகியதைத் தொடர்ந்து, அமீரின் சகோதரியின் மகன், அதாவது மருமகனான ஷேக் சபா அல் காலித் கடந்த நவம்பர் 19, 2019 அன்று முதல் முறையாக பிரதமரானார். இதையடுத்து ஊழலுக்கு எதிராக அவரது தலைமையிலான விசாரணையில் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட பலரை கைது செய்ய வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.