இந்தியாவில் இருந்து வீட்டுத் தொழிலாளர்கள் வருகின்ற வியாழக்கிழமை முதல் மீணடும் குவைத்திற்கு வரத் தொடங்குவார்கள். ஏர் இந்தியா, குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவற்றுடன் இணைந்து அவர்களை நேரடியாக குவைத்திற்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை தொடங்குகிறது. இதுதொடர்பாக குவைத் தேசிய விமான சேவைகளின் பொது மேலாளர் மன்சூர் அல் குசைன் கூறியதாவது....இதற்கான குவைத் அரசு வெளியிட்டுள்ள Belsalamah.com தளத்தில் பதிவு செய்த நபர்களை இவ்வாறு அழைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா காரணமாக 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாட்டிற்கு நேரடியாக நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் வீட்டுத் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறை நிலவிய நிலையில் வீட்டுத் தொழிலாளர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக(Article-20) நேரடி நுழைவுத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், குவைத் விமான நிலையம் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டதால் இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் திரும்புவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மீண்டும் வியாழக்கிழமை முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பயண டிக்கெட், மூன்று பி.சி.ஆர் பரிசோதனை, உணவு, இரண்டு வார ஹோட்டல் தனிமைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து உட்பட சுமார் 400 தினார்கள் கட்டணமாக வசூலிக்கப்படும், இந்த தொகையை தொழிலாளர்களை அழைத்து வரும் ஸ்பான்சர்கள் ஏற்க வேண்டும். இதேபோல் இலங்கையில் இருந்தும் வீட்டுத் தொழிலாளர்களை அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுப்பதை குறித்து இரு நாடுகளின் விமான போக்குவரத்து துறை மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக குவைத் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.