கத்தார் விமானங்களுக்கான வான்வழி விமான எல்லையை எகிப்து திறந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கத்தார் விமானங்களுக்கான தடையை நீக்கியுள்ளதாகவும், கத்தார் விமானங்கள் எகிப்திய வான்வெளி வழியாக பயணிக்க முடியும் என்றும் எகிப்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஜி.சி.சி உச்சி மாநாட்டில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை அல் உலாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளின் விமான நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் விமான சேவைகளை இயக்க முடியும். எகிப்து மற்றும் கத்தாரில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு விமான சேவை நிறுவனங்கள் கால அட்டவணையை ஒப்புதலுக்காக அனுப்ப வைக்க வேண்டும் என்று எகிப்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் அஷ்ரப் நூயுர் தெரிவித்தார். தடை முடிவடைந்த நிலையில் முதல் கட்டாரி விமானம் நேற்று காலை எகிப்திய வான்வெளி வழியாக கடந்து சென்றது.
இதற்கிடையில், சவுதி அரேபியா ஏற்கனவே கத்தார் உடனான அனைத்து போக்குவரத்தையும் மீண்டும் தொடங்கியுள்ளது.கத்தார் ஏர்வேஸ் மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் இரு நாடுகளுக்கும் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் ஆரம்பத்தில் ரியாத் மற்றும் ஜித்தாவிலிருந்து வாரத்திற்கு ஏழு சேவைகளை இயக்கும் என்று தெரிவித்துள்ளது. இதில் ரியாத்தில் இருந்து வாரத்திற்கு நான்கு விமானங்களும், ஜித்தாவிலிருந்து வாரத்திற்கு மூன்று விமானங்களையும் முதலில் இயக்க முடிவு செய்து சேவைகள் இயக்கவும் துவங்கியுள்ளது.