குவைத்தில் கோவிட் தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றி பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கல்வித்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் இணைந்து நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். கல்வித்துறை அமைச்சர் டாக்டர். அலி-அல்-முதாஃப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் முன்னெடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக உள்ளூர் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அமைச்சகம் கூட்டத்தில் விரிவாக விவாதித்ததாகவும் ,நாட்டில் படிப்படியாக பள்ளிகளைத் மீண்டும் தொடங்குவதற்கான முதல் படியாக இந்த சந்திப்பு இருந்தது எனவும், இந்த விஷயத்தை விரிவாக ஆய்வு செய்ய அடுத்த வாரம் மீண்டும் இரண்டு துறைகளின் அதிகாரிகள் மீண்டும் சந்திப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையை மதிப்பிட்ட பின்னரே பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதரத்துறையின் வல்லுநர்கள் கல்வித்துறையில் உள்ள வல்லுநர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட அனைவருடனும் கலந்தாலோசித்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.