சவுதியில் உள்ளூர் மரங்களை வெட்டி விற்பனை செய்வதையோ அல்லது எடுத்துச் செல்லவோ தடைசெய்யும் சட்டங்களை மீறியதாக குற்றத்திற்காக 34 பேர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ரியாத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறப்புப் படைகள் (SFES) புதன்கிழமை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் 21 சவுதி குடிமக்கள், ஒன்பது சூடானியர்கள், இரண்டு பாகிஸ்தானியர்கள், ஒரு நபர் ஏமன், மற்றொரு நபர் இந்தியர் ஆகியோர் இதில் அடங்குவர், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 52 டன்களுக்கும் அதிகமான உள்ளூர் மரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறப்புப் படைகள் மற்றும் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் உள்துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு ஏற்ப இந்த சட்ட நடவடிக்கை உள்ளது.
நாடு முழுவதும் சுற்றுச்சூழல்,வனவிலங்குகள் மற்றும் பல்லுயிரியலைப் பாதுகாத்தல், மேலும் நாட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட சேவைகளில் FES அமைப்பில் தற்போது 1,100 ஊழியர்கள் உள்ளனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த ஊழியர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயரும் என்று SFES தளபதி ஜெனரல் சஹெர் பின் முஹம்மது அல்-ஹர்பி கடந்த மாதம் அரபு செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.
முன்னர் கடந்த நவம்பர் மாதத்தில் மரங்களை வெட்டினால் 3 கோடி ரியால் அபராதம் மற்றும் 10 வருடங்கள் சிறை தண்டனையும் என்பது உள்ளிட்ட கடுமையான சட்டங்களை சவுதி அறிவித்துள்ளது. இதில் நாட்டில் உள்ள மரங்களை வெட்டுவது, மருத்துவ வகை தாவரங்கள் மற்றும் பிற தாவரங்களை வேருடன் பிடுங்குவது, இலைகளை உரிப்பது மற்றும் மரத்தின் கீழ் பகுதிகளில் இருந்து மண்ணை அகற்றுவது அனைத்தும் சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.